செய்திகள்

மாற்ற முடியாது: மாறவும் மாட்டோம்

20 ஆண்டாக ஒரே சரகத்தில்
தனிப்பிரிவில் தனி ஆவர்த்தனம்..

தனிப்பிரிவில் தனி ஆவர்த்தனம் நடத்தும் இரு காக்கிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சரகத்தில் உலா வருவதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏனோ என்று சக காக்கிகள் குமுறுகின்றனர்.
பொள்ளாச்சி சரகத்தில் நேர்மைக்கு பெயர் பெற்ற போலீஸ்காரர் ஒருவர் கொட்டித் தீர்த்தது, மதுக்கடைகளில் சில்லிங் விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட சில சட்டவிரோத செயல்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் பொள்ளாச்சி சரகத்தில் இவற்றோடு சேர்த்து விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு சட்ட விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாததற்கு காரணம் திறமையான, நேர்மையான அதிகாரிகள் இங்கு பணிக்கு வந்தாலும் அவர்களை செயல்பட முடியாத அளவுக்கு கைகளைக் கட்டிப் போடுவது இங்குள்ள தனிப்பிரிவு போலீசார் இருவர் மட்டுமே.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதும், குற்றங்கள் நிகழ்ந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதும் போலீசாரின் பிரதான கடமை. ஆனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைள், குற்றப்பின்னணி கொண்டவர்களின் செயல்பாடுகள், சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கான அறிகுறிகள் ஆகியவற்றை கண்காணித்து முன்பே தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தனிப்பிரிவு போலீசின் கடமை.
ஆனால் பொள்ளாச்சி சரகத்தை பொருத்தவரை குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் இரு நபர்கள் தங்கள் கடமைகளை மறந்து வசூல் வேட்டையை மட்டுமே சிறப்பாக செய்து வருகின்றனர்.
சாதாரண காவலர்களாக பணியில் சேர்ந்தவர்கள் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் என பதவி உயர்வு பெற்றும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதே சரகத்தில் பணியாற்றி வருவது, அதிலும் தனிப்பிரிவில் மட்டுமே பணியாற்றுவதும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பெரிய அளவில் பிரச்சனைகள் எழும்போது அருகே உள்ள சரகங்களுக்கு பணிமாறுதல் பெற்று, ஓரிரு மாதங்களிலேயே மீண்டும் பொள்ளாச்சிக்குள் வந்துவிடுகின்றனர்.
சாதாரண காவலர் முதல் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் வரை பல்வேறு இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படும்போது இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு.
பொள்ளாச்சியில் அனைத்து மதுபானக் கடைகளிலும் சில்லிங் விற்பனை, லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடும் சீட்டாட்டம், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் போன்ற சட்ட விரோத செயல்கள் மட்டுமின்றி ரேஷன் அரிசி, கஞ்சா, சந்தனக் கட்டைகள், எரிசாராயம், கருங்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் ஆகியவற்றை கடத்தும் தொழில் இன்றுவரை தங்கு தடையின்றி நடக்கிறது.
கல் குவாரிகளில் அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் வைத்திருத்தல், கலப்பட உரம் தயாரித்தல் என பல்வேறு குற்ற சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடப்படும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் பொள்ளாச்சி நகரை ஒட்டிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு உடைத்து உதிரி பாகங்களாக பிரிக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் முன்கூட்டியே கண்காணித்து தடுக்க வேண்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண காவலர்களாக இருந்த போதே இவர்கள் இருவரும் ராஜா மில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்கள். லட்சக்கணக்கில் முதலீடு செய்து பார் எடுத்து நடத்தும் அளவுக்கு அவர்கள் துணிந்து போதே உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சரகத்தில் குற்றச்சம்பவங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.
இங்கு பணிக்கு வரும் ஆய்வாளர் முதல் துணை கண்காணிப்பாளர் வரை சக போலீசாரை மதிக்காமல் இவ்விரு நபர்களின் பேச்சை மட்டுமே கேட்கின்றனர்.
அதன் காரணமாக அமைதியான ஊர் என்று பலராலும் பாராட்டப்பட்ட இந்த பொள்ளாச்சி தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஊர் என்று பெயர் எடுத்துள்ளது.
உயர் அதிகாரிகள் இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி இவ்விரு நபர்களும் இனி எக்காலத்திலும் இந்த சரகத்தில் பணியாற்ற முடியாதபடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நிம்மதி பிறக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button