அரசுக்கு அவப்பெயர்: எம்.எல்.ஏ. மீது புகார்
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வால்பாறை எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் புகார் மனு அளித்துள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்டது அர்த்தனாரி பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் வால்பாறை எம்.எல்.ஏ. வான அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமுல் கந்தசாமி தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து முதல்வரின் அறிவிப்பு பலகை கூட அங்கே இருக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அர்த்தனாரிபாளையம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் குலோத்துங்கன் ஆழியார் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவையும் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதை ஒட்டுமொத்த மக்களும் பாராட்டுகின்றனர்.
இதனை சகித்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க. வினர் இந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றனர். கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் அர்த்தனாரி பாளையம் ஊராட்சியில் நடைபெறாத அளவுக்கு அ.தி.மு.க. வினர் நடந்துகொண்டனர்.
ஆகவே இதற்கு காரணமான வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மற்றும் உடன் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க. ஒன்றிய செயலாளர்களான தேவசேனாதிபதி, யுவராஜ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.