புறக்காவல் நிலையம் திறப்பு
பொள்ளாச்சி ஆழியார் ரோட்டில் நா.மூ. சுங்கம் பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது ஆழியார் போலீஸ் ஸ்டேஷன். ஆழியாரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள நா.மூ. சுங்கம் மிக முக்கியமான பகுதியாகும். 4 ரோடுகள் சந்திக்கும் இந்தப்பகுதியில் இருந்து வால்பாறை, ஆனைமலை வழியாக கேரளா, உடுமலை, பழனி, பொள்ளாச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் மிக அவசியமானதாகும்.
குற்றச் சம்பவங்கள் நடைபெறும் போது வாகன சோதனை நடத்துவதற்கும், வேறு இடங்களில் இருந்து குற்றம் தொடர்பாக வரும் வாகனங்களையும் பிடிப்பதற்கும் இங்கு செக்போஸ்ட் அமைப்பது அவசியம் என்று போலீசார் கருதினர்.
ஆகவே நா.மூ. சுங்கம் பகுதியில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. ரோடு விரிவாக்க பணியின்போது அந்த செக்போஸ்ட் அகற்றப்பட்டது. சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த இடத்தில் புதிதாக செக்போஸ்ட் அமைக்கப்பட்டது.
இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்த புறக்காவல் நிலையம் 24 மணி நேரம் செயல்படும். காவலர்கள் பணியில் இருப்பார்கள். வாகன சோதனை மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கவும் இந்த புறக்காவல் நிலையம் உதவிகரமாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் வால்பாறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆனைமலை இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகவேல், தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில், தென்சங்கம்பாளையம் ஊராட்சித் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.