ஆன்லைன் விற்பனைக்கு தடை
மருந்து வணிகர்கள் கோரிக்கை
ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மருந்து வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி தாலுக்கா மருந்து வணிகர் சங்கங்கத்தின் 8வது ஆண்டு விழா மற்றும் கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சமத்தூர் அருகே உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
பொள்ளாச்சி தாலுக்கா மருந்து வணிகர் சங்கத் தலைவர் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் செல்வம், மேட்டுப்பாளையம் தாலுக்கா தலைவர் முருகேஷ், சூலூர் தங்கபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட மருந்துகள், போதை மருந்துகள் மற்றும் தரம் குறைவான மருந்துகள் வர வாய்ப்புள்ளதாலும், மருந்தாளுனர் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளதாலும் ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்யவேண்டும்,
குளிர்சாதனப் பெட்டி வைக்க வேண்டி உள்ளதால் மருந்துக் கடைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகை கொடுக்க வேண்டும்,
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பி.பார்ம்., டி.பார்ம் படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.