கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு
உடுமலை தாலுக்கா
குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துகிணத்துப்பட்டி கிராமத்தில் தனியார் தாய் கோழிப்பண்ணை சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு கிளம்பியது.
பண்ணையில் இருந்து வரும் கழிவுகளினால் துர்நாற்றம் வீசும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறிய கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் கலெக்டர் வரை புகார் மனு கொடுத்தனர். இதனை அடுத்து குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கோழிப்பண்ணை கட்டுமான பணிகளை நிறுத்துமாறு அறிவுறுத்திச் சென்றார்.
அதனையும் மீறி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக புகார் கூறும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் இணைந்து கோழிப்பண்ணை முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் சிவக்குமார், ஜோதி மணிகண்டன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கண்ணன்,
உடுமலை.