உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் மக்கள் பணியில் அதிகாரிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என தி.மு.க. வினர் வலியுறுத்தல். உள்ளாட்சித் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் குருமூர்த்தி, நகர்நல அலுவலர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் கவுன்சிலர்கள் பேசுகையில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சாக்கடை வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கூறுகிறோம். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.
பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் இத்திட்டத்தில் வீடுகளில் குழாய் பதிக்கும் பணிக்கு நகராட்சி ஒப்பந்ததாரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உடுமலை ரோட்டில் உள்ள மயானத்தை பராமரிப்பதில்லை, வார்டுகள் மறுசீரமைப்பில் ஏராளமான குளறுபடிகள் என்பன உட்பட பல்வேறு புகார்கள் குறித்து பேசினர். மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், தெருவிளக்குகள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும் நடைபாதை வியாபாரிகள் நலன் கருதி அவர்களை சிரமமின்றி வியாபாரம் செய்ய வழிவகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.