அதிகாரிகளைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளைக் கண்டித்து சி.ஐ.டி.யு. சங்க தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்.
அரசு போக்குவரத்து கழக பொள்ளாச்சி கோட்டத்தில் 3 கிளைகள் உள்ளன. ஓட்டுனர், நடத்துனர் மற்றும் இதர பணியாளர்கள் என 3 கோட்டத்திலும் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலான பணியாளர்களும் சி.ஐ.டி.யு., தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்களில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
இதில் சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுனர், நடத்துனர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பழிவாங்கும் நோக்கில் சில அதிகாரிகள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகள் சந்தித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாததைக் கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சி.டி.சி. மேடு அருகில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பொள்ளாச்சி கோட்ட அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட மண்டல தலைவர் பரமசிவம், செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வண்டி போஸ்டிங் நடைமுறையை மீறாதே, ஊழலுக்கு துணை போகாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை தொழிலாளர்கள் எழுப்பினர். தொழிலாளர்களின் போராட்டத்தை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் முற்றுகை போராட்டம், காலவரையற்ற காத்திருப்பு போராட்டமாக மாறியது.
அதிகாரிகள் வந்து பேசி தங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் வரை இந்த போராட்டம் நீடிக்கும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.