பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வரிடம் புகார்
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 11 வயது பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுக்கா செயலாளருமான வி.எஸ். பரமசிவம், தமிழக
முதல்வர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வன கிராமத்தில் கடந்த புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி மதியம் சுமார் 2 மணி அளவில், அந்த வன கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை மர்ம நபர்கள், மயக்க மருந்து கொடுத்து வனத்திற்குள் தூக்கிச்சென்று, பாலியல் சித்திரவதை செய்து, பின்னர் சுமார் இரவு 7 மணியளவில் அவரது வீட்டு முன்பு கண்கள் கட்டப்பட்ட நிலையில் குற்றுயிராக விட்டுச் சென்றிருப்பதாக தெரிகிறது.
இச்சம்பவம் மற்ற பழங்குடியின கிராமங்களில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வனத்திற்குள், வனத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் அத்துமீறி மயக்க மருந்து பொருட்களோடு சென்று இக்கொடூரத்தை செய்திருக்கிறார்கள்.
பழங்குடி சிறுமி மீதான இந்த வன்முறை, இதுவரை நடந்திராத கோர சம்பவம். இது ஒட்டுமொத்த பழங்குடியின சமூகத்தின் பாதுகாப்பையும், வனப்பாதுகாப்பு மற்றும் வனத்தின் பூர்வகுடி மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார் என உடனடியாக கண்டறிந்து, அவர்கள் மீது துரித விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியும், நியாயமும் வழங்குவதோடு, பழங்குடியின பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பிலும், ஆனைமலைத்தொடர் மற்றும் கோவை பழங்குடியின மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.