7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காமுகனுக்கு 20 ஆண்டு சிறை
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூரைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அவரது உறவினரின் மகளான 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நடராஜை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அவிநாசி அனைத்து மகளிர் போலீசார், நடராஜ் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பித்தனர். வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், நீதிபதி சுகந்தி, குற்றவாளி நடராஜருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.