விதி மீறல்: பேக்கரிக்கு பூட்டு
பொள்ளாச்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய பேக்கரிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. பார்சல் சேவைக்கு மட்டுமே இந்த அனுமதி. மேலும் தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும், கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும் என்று அரசு ஏற்கனவே தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள மெட்ரோ பேக்கரியில் விதிகளை மீறி செயல்படுவதாக புகார் எழுந்தது. நகராட்சியின் நகர் நல பிரிவு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பேக்கரிக்குள் நெரிசலாக வாடிக்கையாளர்கள் இருந்தது, வாடிக்கையாளர் அமர்ந்து டீ அருந்த அனுமதித்தது உள்ளிட்ட பல விதிமீறல்கள் தெரியவந்தது. உடனடியாக நகர்நல பிரிவு அலுவலர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு பேக்கரிக்கு பூட்டு போட்டனர்.