ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் ரத்து
கொரோனா பரவல் காரணமாக ஊராட்சிகளில் நாளை நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி விதிகளின்படி ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்), மே 1ம் தேதி (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினம்), அக்டோபர் 2ம் தேதி (காந்தி ஜெயந்தி) என ஆண்டுக்கு 4 நாட்கள் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட உள்ள. வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும் ஊராட்சியின் வரவு செலவு கணக்கை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கல் செய்ய வேண்டும். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களும் பெறப்படும்.
அதன்படி குடியரசு தினமான நாளை (ஜன. 26) ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் பி நாயர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ள கடிதத்தில், கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர்கள், ஒன்றிய அதிகாரிகள் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் முறையாக தெரிவிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.