தனியார் நீர்வீழ்ச்சி பகுதியில் சாராயம் காய்ச்சிய பலே ஆசாமிகள்
திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் சாராயம் காய்ச்சி விற்கும் அதிர்ச்சி சம்பவம் போலீசாரின் அதிரடி சோதனையில் அம்பலமாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் உள்ள திருவாடுதுறை ஆதீன மடத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமைந்துள்ளது டைமண்ட் அருவி. பிரபல தொழில் நிறுவனமான இ.டி.ஏ. குரூப்ஸ் இந்த இடத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது. சமீபத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, 6 நீர் வீழ்ச்சிகள் கொண்ட இந்த இடத்தை இ.டி.ஏ. குரூப்ஸ் நிறுவனம் தன்வசமாக்கிக் கொண்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலை உச்சியில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து அவர்களிடம் இருந்து அதிகளவிலான சாராயத்தை பறிமுதல் செய்தனர். திருவாடுதுறை ஆதீன மடத்திற்குச் சொந்தமான இந்த இடத்தையும் சாராய வியாபாரிகள் விட்டு வைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.