மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா பிப்ரவரி மாதம் 1ம் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை பிப்ரவரி மாதம் 14ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. ஆனைமலை முக்கோணத்தில் இருந்து கோட்டூர் செல்லும் ரோட்டில் ஆழியாறு ஆற்றுப்பாலத்தை ஒட்டிய மயானத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
மயான பூஜை முடிந்து அங்கிருந்து 15ம் தேதி காலை 6:30 மணிக்கு கொண்டு வரப்படும் சக்தி கும்பஸ்தானம், கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்று மாலை சக்தி கும்ஸ்தானத்துக்கு மகா பூஜையும் நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை 9:30 மணியில் இருந்து 10:30 மணிக்குள் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 17ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்கும். தொடர்ந்து 18ம் தேதி கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், மகா முனி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 19ம் தேதி மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது. இவ்வாறு கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.