வேட்பாளர் தேர்வில் குளறுபடி
ஆடியோ வைரலால் பரபரப்பு
கட்சிக்காக பாடுபட்டவர்களை விட்டுவிட்டு, புதிய நபர்களை வேட்பாளராக அறிவித்துள்ளதால் தி.மு.க. விசுவாசிகள் குமுறி வருகின்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியையும் கோட்டை விட்டது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையின் பக்கம் கவனத்தை திருப்பிய தி.மு.க. தலைமை அமைச்சர் செந்தில் பாலாஜியை மாவட்ட பொறுப்பு அமைச்சராக களமிறக்கியது.
அவரும், உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிட முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
ஆனால் தற்போதைய கள நிலவரமோ தி.மு.க. வுக்கு எதிராக உள்ளதாகவே பேசப்படுகிறது.
இதற்கு காரணம் வேட்பாளர்கள் தேர்வில் நிலவும் குளறுபடியை காரணம் என தி.மு.க. விசுவாசிகள் புலம்புகின்றனர்.
அதிலும் மகளிர் அணியில் மாவட்ட பொறுப்பில் உள்ள ஒருவர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர், நகர துணைச் செயலாளர் உள்ளிட்டோரை வெளுத்து வாங்கி வெளியிட்ட ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கட்சிக்காக இத்தனை ஆண்டுகளாக விசுவாசமாக பாடுபட்டு வருகிறோம். உள்ளாட்சி நிர்வாகத்தில் வாய்ப்பு வழங்குவதே எங்களுக்கு அங்கீகாரம்.
ஆனால் மாவட்ட பொறுப்பாளரும், நகர துணைச் செயலாளரும் சேர்ந்து கொண்டு புதிதாக கட்சிக்குள் வந்த நபர்களுக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
கோவை மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் இதே நிலை தான் உள்ளது.
தலைமைக்கு தெரியாமல் தன்னிச்சையாக இவர்கள் எடுத்துள்ள முடிவால் கோவையில் நிச்சயம் உள்ளாட்சியில் தி.மு.க. கோட்டை விடும். இதைத்தான் எங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தி.மு.க. வில் நிலவும் இந்த குளறுபடிகள் குறித்து விசில் மீடியா முன்கூட்டியே துல்லியமாக கணித்து செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.