தூத்துக்குடி மாநகராட்சியில் 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
தூத்துக்குடி மாநகராட்சியில் 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சாருஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 480 பெறப்பட்டது. பரிசீலனையின்போது 9, 17, 28, 50, 56 ஆகிய வார்டுகளுக்கு தாக்கல் செய்தவர்களில் 5 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் 4 மனுக்கள் இரட்டைப் பதிவு மற்றும் ஒருவருக்கு தூத்துக்குடியில் வாக்குரிமை இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்பு மனுக்கள் வருகிற 7ம் தேதி (திங்கள்) மாலை 3மணி வரை திருப்ப பெறலாம். அன்றைய தினம் மாலையே வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். இதுவரை 3 தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்களுக்கான 2வது கட்ட பயிற்சி 10ம் தேதியும் 3ம் கட்ட பயிற்சி 18ம் தேதியும் நடைபெறும்.
வருகிற 19ம் தேதி அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும். பூத் சிலிப்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வழங்கப்படும் என்றார்.
செய்தியாளர் மாரி ராஜா,
தூத்துக்குடி.