பெண்கள் வார்டில் இரு தம்பிகளின் மனுக்கள் தள்ளுபடி
பெண்கள் போட்டியிடும் வார்டில் தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் இரு ஆண் வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் 18வது வார்டில் தேசிங்குராஜா, 21வது வார்டில் ஜீவானந்தம், 31வது வார்டில் கார்த்திக், 34வது வார்டில் ரமேஷ் ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 31 மற்றும் 34வது வார்டில் தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
என்ன காரணத்திற்காக இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது என்று விசாரித்தபோது, கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்த அந்த இரு வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் என்பது தெரியவந்தது.
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் வேட்பாளர்கள் இருவர் மனு தாக்கல் செய்து அது தள்ளுபடியான சம்பவம் தற்போது நகர் முழுக்க சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.