செய்திகள்

வாய்ப்பில்லை ராஜா….

லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ருசிகரம்

பறிமுதல் நகையில் 10 பவுனை காணவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது பழி சுமத்தி நாடகமாடிய ஆய்வாளர் கண்மணி தம்பதி.

குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கடந்த 11ம் தேதி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்மணி மற்றும் குற்றவியல் உதவி இயக்குனராக பணிபுரியும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை தன்வசப்படுத்தி தானே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு பாலியல் குற்றவாளிகளை விடுவிக்க லஞ்சம் பெற்றது, கனிமவள மாபியா கும்பலிடம் இருந்து லஞ்சம் வாங்கியது, உயர் அதிகாரிகளுக்கு என்று லஞ்சப் பணம் பெற்றுக் கொடுத்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக இருவரும் சொத்து சேர்த்த ஆதாரம் கிடைத்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 12ம் தேதி காலை 6 மணிக்கு ஆய்வாளர் கண்மணி தம்பதிகளின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தொடங்கினர். அன்று இரவு சுமார் 8 மணி அளவில் சோதனை முடிவுற்றது. அப்போது திடீரென ஆய்வாளர் கண்மணி 10 பவுன் செயினை காணவில்லை அதை தந்து விட்டு செல்லுங்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி மிரட்ட ஆரம்பித்துள்ளார். சுதாகரித்துக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு சாட்சிகளின் முன்னிலையில் மீண்டும் கைப்பற்றிய ஆவணங்கள் உட்பட அனைத்தையும் சோதனை செய்தனர். ஆனாலும் நகை கிடைக்கவில்லை. லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சமயோசிதமாக சோதனை தொடங்கிய காலை 6 மணி முதல் தொடர்ந்து அனைத்து சோதனையையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தனர். மேலும் ஆய்வாளர் கண்மணியின் செயல்பாடுகள் மிகவும் சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருந்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீதே குற்றம் சுமத்தியதால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாங்கள் எடுத்துக்கொண்டிருந்த வீடியோ பதிவை மறுபடியும் பரிசோதித்தனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் அருகில் நின்ற ஆய்வாளர் கண்மணியின் கணவர் சேவியர் பாண்டியன் நகை மதிப்பீட்டாளர் எடைபோட்டு வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியை நைசாக எடுத்து கழுத்தில் அணிந்து கொண்ட வீடியோ பதிவை ஆய்வாளர் கண்மணி மற்றும் அவரது கணவரிடம் காண்பித்தபோது விக்கித்து நின்றனர். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் அந்த பதிவை காண்பித்து இந்த நகை எங்கே உள்ளது என்று கேட்க சேவியர் பாண்டியன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுமன்றி தனது கழுத்தில் இருந்த நகை கழட்டி காண்பித்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அரசு சாட்சிகள் முன்னிலையிலேயே நடந்தது. 12ம் தேதி இரவு சுமார் எட்டு மணிக்கு சோதனையை முடித்துக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்துக்கு செல்ல இருந்த நேரத்தில் 10 பவுன் நகையை காணவில்லை என்று ஆய்வாளர் கண்மணி நாடகம் ஆடி லஞ்ச ஒழிப்பு போலீசாரை சுமார் ஆறு மணி நேரமாக அலைக்கழித்து பழி வாங்கிய செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடங்கிய காலை 6 மணி முதல் சோதனை முடியும் வரை தொடர்ந்து அனைத்து சம்பவங்களையும் வீடியோவாக பதிவு செய்ததால் 10 பவுன் நகையை காணவில்லை என்று நாடகமாடி லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது பழி சுமத்திய ஆய்வாளர் கண்மணி இடமிருந்து தப்பிய செயல் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் மிகுந்த எச்சரிக்கையான சோதனை நடவடிக்கைகளை பதிவு செய்த வீடியோவால் குற்றச்சாட்டிலிருந்து தப்பியது மிகப்பெரும் அதிர்ஷ்டமாக அமைந்தது என்றால் மிகையல்ல.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button