தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம் – உதயநிதி ஸ்டாலின்
பொள்ளாச்சி மற்றும் கோட்டூரில் பிச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் கட்டாயம் நிறைவேற்றுவார் என்று தெரிவித்தார்.
நகர்ப்புற
உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி, ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பொள்ளாச்சி பல்லடம் ரோடு சந்திப்பிலும், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், கோட்டூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோட்டூரிலும் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், தமிழக முதல்வர் கடந்த 9 மாதங்களில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரானா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம், நகை கடன் தள்ளுபடி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் நிச்சயமாக நிறைவேற்றுவார்.
ஆட்சியை விட்டுப் போகும்போது அதிமுகவினர் கஜானாவை காலி செய்து விட்டு போய் விட்டனர். அவற்றையெல்லாம் சரிசெய்து அரசின் வருவாயை பெருக்கி மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த இந்த அரசு முழுமையாக பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர பொறுப்பாளர் வடுகை பழனிச்சாமி, நகரத் துணைச் செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் யுவராஜ், சேனாதிபதி, கோட்டூர் நகர பொறுப்பாளர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.