
திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களில் இருந்து கண்டைனர் லாரிகளில் அளவுக்கு அதிகமான மாடுகளை உணவு தண்ணீர் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஏற்றி கொண்டு செல்கின்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் இருக்கின்ற போதிலும் இதுபோன்ற வாகனங்கள் எந்த ஆய்வுக்கும் உட்படாமல் சென்று வருகின்றன.

மேலும் இதுபோன்ற கால்நடைகளுக்கு ஏற்படும் சித்திரவதைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை தலைவராகவும் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை துணை தலைவராகவும் மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறையின் கட்டுப்பாட்டில் தொண்டு நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் என்கின்ற பெயரில் 2007-ம் ஆண்டு பதிவு செய்து 13 பேர் ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் பதவிகளில் நியமிக்கப்பட்டு தற்போது 9 பேர் பணியாற்றி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தொண்டு நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் காவல் துறை மற்றும் வனத்துறை போன்ற அரசாங்க சட்ட அமலாக்க துறைக்கு நிகரான (அதே தோற்றத்தை ஏற்படுத்தும் காக்கி சீருடை) பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வளவு ஏற்பாடுகள் இருந்தும் வாகனங்களில் ஆடு மாடுகள் மற்றும் இன்ன பிற விலங்குகள் கொண்டுசெல்லப்படுவதை உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வழியில்லாமல் விலங்குகளை மிகவும் கடும் சித்திரவதையுடன் கால்நடை வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.
இதில் வேதனையான விஷயம் கால்நடைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் முறையாக இயங்காமல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு அரசு சட்ட அமலாக்கத்துறை போன்று எந்த கண்காணிப்பு மற்றும் கட்டமைப்பும் இல்லாமல் கால்நடை கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்தி கையூட்டு மட்டும் பெற்று வருவதாகவும் , இவர்கள் மீது புகார் தெரிவிக்கும் நபர்கள் பல்வேறு வகைகளில் மிரட்டி பணிய வைக்கவும் , மேலும் புகார் தெரிவிக்காமல் இருக்கும் அளவிற்கு பயமுறுத்தும் அளவிற்கு மாவட்டத்தில் தனி ராஜாங்கம் நடத்தி வரும் இவர்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கூட கண்டும் காணாமல் விட்டுவிடும் அளவிற்கு மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்க செயல்பாடுகள் உள்ளதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உரிய கண்காணிப்பு மற்றும் இதர நடவடிக்கைகளை மேற்கொண்டு கால்நடைகள் கொண்டு செல்லும் நடைமுறைகளில் உள்ள விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.