விசாரிக்காமல் நடவடிக்கை – ராஜினாமா கடிதம் கொடுத்த எஸ்.ஐ.
விசாரணை இன்றி நடவடிக்கை எடுத்ததால் அதிருப்தியடைந்த உதவி ஆய்வாளர் தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கங்கை நாத பாண்டியன். சமீபத்தில் ஆடு திருடும் கும்பல் ஒன்றை கைது செய்தார். இந்த கும்பல் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில் இந்த கும்பலை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிப்பதற்காக இவர், 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது.
இதனையடுத்து அவர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் தன்மீதான குற்றச்சாட்டு குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தாமல் தன்னை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்ததாகவும், இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்ததோடு தனது பணியை ராஜினாமா செய்வதாகவும், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் கடிதம் அளித்துள்ளார். இக்கடிதம் உயரதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மாரி ராஜா,
தூத்துக்குடி.