மகாலிங்கம் கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வகத் துவக்க விழா
பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில்
தொழில்நுட்ப ஆய்வகத் துவக்க விழா நடைபெற்றது.
கேப்ஜெமெனை இன்ஜினியரிங் இந்தியா நிறுவனம் தென்னிந்தியாவில் முதல் முறையாக, உற்பத்தி சார் வாழ்க்கை சுழற்சி மேலாண்மைத் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் மாதிரி அடிப்படையிலான அமைப்புகள் சார்ந்த பொறியியல் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றை தொடங்குவதற்கு டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியைத் தேர்வு செய்தது. இதற்கென கடந்த சில மாதங்களுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டது. இதன் பயனாக ஒவ்வொரு வருடமும் கல்லூரியில் இயந்திரவியல் மற்றும் வாகனவியல் துறையில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி. எல்.எம். மற்றும் எம்.பி. எஸ்.இ. துறையில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அருட்செல்வர் உயர் தொழில்நுட்ப மையத்தில் பி.எல்.எம். தொழில்நுட்ப ஆய்வகமும், எம்.பி.எஸ்.இ. தொழில்நுட்ப ஆய்வகமும், கல்லூரியின் தலைவர் டாக்டர்.எம்.மாணிக்கம், கேப்ஜெமெனை-யின் மூத்த இயக்குனர் ரங்கராஜ் சிவகுமார், கல்லூரியின் தாளாளர் ஹரிஹரசுதன், என்.ஐ. ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் டாக்டர். சி. ராமசாமி மற்றும் முக்கிய பிரதிநிதிகள் முன்னிலையில் நிறுவப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் தலைவர் சேவுகமூர்த்தி வரவேற்று பேசுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக 2022ம் ஆண்டு பிரிவில் மெக்கானிக்கல்,
ஆட்டோமொபைல், புரொடெக்ஷன் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் துறை பயிலும் 33
மாணவர்கள் வருடத்திற்கு ரூ. 4 லட்சம் ஊதிய அடிப்படையில் பி.எல். எம். துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும், எம்.பி.எஸ்.இ. துறையில் மாணவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான முயற்சிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.
கேப்ஜெமெனை-யின் நிர்வாக துணைத் தலைவர் பிரசாத் ஷெட்டி பேசுகையில், கேப்ஜெமெனை நிறுவனம் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 50 நாடுகளுடன் கூட்டமைத்து, பரந்த அளவிலான தொழில்நுட்ப விற்பனையாளர்களைக்
கொண்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக செயல்படுவதற்கான வளங்களையும் நிபுணத்துவம் மிக்க வல்லுனர்களையும், கேப்ஜெமெனை நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் கூறினார்.
இயந்திரவியல் துறையின் பேராசிரியர்
முனைவர். ராம திருமுருகன் நன்றி கூறினார்.