தந்தை கடைக்கு மகன் தீவைப்பு – ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தாமரை குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது முதல் மனைவி, மகன் லட்சுமணன் ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர். மாரியப்பனுக்கும் மகன் லட்சுமணனனுக்கும் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு மாரியப்பன் வீட்டிற்குச் சென்ற லட்சுமணன் பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆத்திரத்தோடு சென்ற லட்சுமணன், தந்தை மாரியப்பன் ஈரவாய்க்கால் கடைத்தெருவில் வைத்துள்ள இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடைக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, வேளாங்கண்ணி ஆகிய மூன்று இடங்களில் இருந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகன உதிரி பாகங்கள், டயர் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீசார், லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் ராஜேஷ்,
நாகை மாவட்டம்.