மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்கள் – மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு
பொள்ளாச்சி பி.கே.டி. பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி சேரன் நகர் அருகே உள்ளது பி.கே.டி. மெட்ரிகுலேசன் தனியார் பள்ளி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் கணினிப் பிரிவில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் மாணவிகளை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் பள்ளி முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி முதல்வரும் நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளவில்லை. மாணவிகளுக்கு ஆதரவாக 3 ஆசிரியர்கள் முதல்வரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகமோ புகார் செய்த 3 ஆசிரியர்களை திடீரென பணிநீக்கம் செய்தது.
தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த ஒட்டுமொத்த மாணவர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஏராளமான பெற்றோரும், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசாரும் பள்ளிக்கு விரைந்தனர்.
அங்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு இடையே போலீஸ் முன்னிலையில் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
இறுதியாக கணினி ஆசிரியர்கள் இருவரையும், பள்ளி முதல்வரையும் பணி நீக்கம் செய்வதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த மாணவர்களும், பெற்றோரும் கலைந்து சென்றனர்.
அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.