கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த 405 கிலோ குட்கா பறிமுதல்
கோவையில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த இருந்த 405 கிலோ குட்காவை சிறப்பு தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையை அடுத்த செட்டிபாளையம் பைபாஸ் ரோடு அருகே இருந்து டெம்போ ஒன்றின் மூலம் அதிகளவிலான குட்கா கேரளாவுக்கு கடத்தி செல்ல இருப்பதாக பொள்ளாச்சி சிறப்பு தனிப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு தனிப்பிரிவு போலீசார் பாலக்காடு ரோட்டில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. டெம்போவுக்குள் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 405 கிலோ குட்கா இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த சிறப்பு தனிப்பிரிவு போலீசார், குட்கா கடத்தி வந்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஜவகர் என்கிற சபரீசன் என்பவரை கைது செய்தனர். டெம்போ டிரைவர் மற்றும் உரிமையாளரான சபரீசனையும், குட்காவையும் சிறப்பு தனிப்பிரிவு போலீசார் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.