கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பை கண்டித்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி ஐக்கிய ஜமாஅத், ஆல் இன்டியா இமாம்ஸ் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த பொள்ளாச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷாநவாஸ்கான் நிருபர்களிடம் கூறியதாவது, ஹிஜாப் என்பது
இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையாகும். ஹிஜாபை முஸ்லீம் மாணவியர் அணிய தடைவிதித்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை மறுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை வன்மையாக கண்டித்தும், கர்நாடக உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் த.மு.மு.க., பொள்ளாச்சி வட்டார ஜமாத்துல் உலமா சபை, இமாம்ஸ் கவுன்சில், ம.ம.க., ம.ஜ.க. மற்றும்
மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.