போராடி வென்றது ஒற்றை ஓட்டு: சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் முறைப்படி அறிவிப்பு
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஒற்றை ஓட்டில் வென்றவரை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி அறிவித்தது.
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளரும், ஒரு வார்டில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஆறுச்சாமியின் மகளான கவுன்சிலர் ராகிணியை
இப்பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமை அறிவித்தது. இதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
கடந்த 4ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் தலைமையில், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராகிணியும், கவுன்சிலர் வனிதா ஜெயபால் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இம்மறைமுக தேர்தலில் வனிதா ஜெயபால் 8 வாக்குகளும், ராகினி 7 வாக்குகளும் பெற்றனர். ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்ற வனிதா ஜெயபால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராகிணியின் தந்தை ஆறுச்சாமி திடீரென பேரூராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வாக்குச்சீட்டுகளை பறித்துக் கொண்டு வெளியே சென்றார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பிறகு வனிதாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதனால் இந்த தேர்தலை ஒத்தி வைப்பதாக செயல் அலுவலர் அறிவித்தார். இதனையடுத்து கவுன்சிலர் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் கடந்த 26ம் தேதி மறைமுக தேர்தல் நடத்தவும் தடை ஆணை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வனிதா தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் வனிதாவை தலைவராக முறைப்படி அறிவிக்க உத்தரவிட்டது.
அதன்படி இன்று சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தேர்தல் நடத்தும் அலுவலரான ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) ராணி ஆகியோர் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். முன்னதாகவே முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கவுன்சிலர்களும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பிற நபர்கள் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் ஒற்றை ஓட்டில் வெற்றிபெற்ற வனிதா ஜெயபால் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
இதனை அடுத்து பேரூராட்சி அலுவலக வளாகத்தை சுற்றி காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில், தர்மம் வென்றது, அதர்மம் அடங்கியது என கோஷமிட்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியே போலீஸ் பாதுகாப்புடன் அவரவர் வீடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.