குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு
பொள்ளாச்சி நகரில் குடிநீரின் சுவை மாறியதால் சுத்திகரிப்பு நிலையத்தில் நகராட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் 2011 கணக்கெடுப்பின்படி 90 ஆயிரத்து 150 பேர் வசிக்கின்றனர். பொதுமக்கள் தேவைக்கென 17,405 வீட்டுக்குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நகரில் வசிக்கும் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 103 லிட்டர் தண்ணீர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் அருகே ஆழியார் ஆற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 10.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின் நகருக்கு 9.3 மில்லியன் லிட்டர் குடிநீரும், 6 வழியோர கிராமங்களுக்கு 0.8 மில்லியன் லிட்டர் குடிநீரும் வினியோகிக்கப்படுகிறது. இதில் சந்தைப்பேட்டை அருகே உள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் 9 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் 2 தரைமட்ட தொட்டிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மேலும் நகர மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் சுவை மாறுபட்டு இருந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் செய்தனர். இதனையடுத்து நகராட்சித் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தலைமையில் ஆணையாளர் தாணுமூர்த்தி, கவுன்சிலர்கள் பாத்திமா, உமாமகேஸ்வரி துரை பாய் டேஸ்டி பாலு சண்முகப்பிரியா கவிதா ஆகியோர் அம்பராம்பாளையத்திலுள்ள நீரேற்று நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆற்றிலிருந்து நீர் எடுக்கும் இடம், தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். பிறகு அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் முத்துராஜிடம், குடிநீரின் சுவை மாறி உள்ளதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர்.
ஆய்வு குறித்து நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, ஆழியார் ஆற்றில் இருந்து பெறப்படும் தண்ணீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொள்ளாச்சி நகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த சில நாட்களாக குடிநீரின் சுவை மாறி உள்ளதாக புகார் எழுந்தது. உடனடியாக சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் மூலம் ஆழியாறு ஆற்று நீரை விட, பாலாற்று தண்ணீரே அதிக அளவில் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுவதே இப்பிரச்சனைக்கு காரணம் என தெரியவந்தது.
நகராட்சி ஆணையாளர், உதவி பொறியாளர் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்ததில், தற்போது ஆற்றில் தண்ணீர் எடுக்கும் இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தள்ளி ஆழியார் ஆற்றின் இடதுகரையோரம் கிணறு அமைத்து, அங்கு இருந்து குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீரை எடுப்பது என முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் எப்போதும் ஆழியார் ஆற்று தண்ணீர் மட்டுமே எடுத்து சுத்திகரிப்பு செய்ய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.