யானை விரட்டியதில்
தடுக்கி விழுந்த
வேட்டை தடுப்பு காவலர் மரணம்.
வால்பாறை அருகே யானை விரட்டியதில் தடுக்கி விழுந்த வேட்டைத் தடுப்பு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் வேட்டைத்தடுப்பு காவலராக பணியாற்றி வந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு சிவகாமி என்கிற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இன்று காலை மானாம்பள்ளி
வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் பகுதியில் வனத்துறை கார்டு கதிர்வேல், வேட்டைத் தடுப்பு காவலர்களான ரவிச்சந்திரன், பிரபு தம்பான் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்றபோது, எதிரே காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அந்த யானையிடம் இருந்து தப்பிக்க ஆளுக்கொரு திசையில் ஓடினர். ஆனாலும் யானை இவர்களை விரட்டியது.
அனைவரும் அதிக சத்தமிட்டபடி ஓடியதால்
யானை விரட்டுவதை நிறுத்திவிட்டது. வேட்டைத்தடுப்பு காவலர் ரவிச்சந்திரன்
யானையிடம் இருந்து தப்பிக்க ஓடும்போது
அங்கிருந்த மரம் ஒன்றின் வேர் தடுக்கி விழுந்தார். இதில் மார்பு பகுதியில் பலத்த அடிபட்ட அவர் மயக்கமானார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை மானாம்பள்ளி மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,
மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக வால்பாறை போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.