பட்டப்பகலில் துணிகரம்: கார் கண்ணாடியை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை
பொள்ளாச்சி நகரில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூரைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரசாமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஒன்றில் விவசாயக் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தனது உறவினருடன் காரில் அந்த வங்கிக்குச் சென்று கடன் தொகையை செலுத்திவிட்டு, மீண்டும் கடன் பெற்றுக்கொண்டு பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் உணவருந்தச் சென்றார். தனது காரை ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தி விட்டுச் சென்றார். இருவரும் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது காரின் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு காருக்குள் இருந்த பணம் ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து ஈஸ்வரசாமி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.