இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்துக் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் வணிக வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கைபர் மாவட்டத்தில் உள்ள எல்லை நகரமான லாண்டி கோட்டல் பஜாரில் ‘கைபர் கோவில்’ அமைந்துள்ளது. இது 1947ல் அப்பகுதி குடியிருப்பாளர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தபோது மூடப்பட்டது.
பல ஆண்டுகளாக அழிந்து வந்த இந்த கோவிலில் வணிக வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் சுமார் 10-15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேட்ட போது, பல்வேறு நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஹிந்து கோவில் இருப்பது குறித்து தங்களுக்குத் தெரியாது. சட்ட விதிகளின்படி கட்டுமானம் நடப்பதாகக் கூறியுள்ளனர்.
லாண்டி கோட்டலைச் சேர்ந்த பழங்குடி பத்திரிக்கையாளர் இப்ராஹிம் ஷின்வாரி கூறியதாவது; லண்டி கோட்டல் பஜாரின் மையத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது உள்ளூர் ஹிந்துக்கள் இடம்பெயர்ந்த பிறகு 1947 இல் மூடப்பட்டது.
சிறுவயதில், தனது முன்னோர்களிடமிருந்து கோவிலைப் பற்றி பல கதைகளைக் கேட்டிருக்கிறேன்.லாண்டி கோட்டலில் ‘கைபர் கோயில்’ என்ற பெயரில் ஒரு கோவில் இருந்தது என்பதில் சந்தேகமில்லை” என்றார். மத சிறுபான்மையினருக்கான தனது கடமைகளை அரசு நிறைவேற்றத் தவறினால், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற வரலாற்று கட்டடங்கள் அனைத்தும் விரைவில் மறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.