திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற நால்வரை கைது செய்த வனத்துறையினர், உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரை அடுத்த ராதாபுரம் காப்புக்காடு பகுதியில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையில் வனவர்கள் சியாமளா, முருகன் மற்றும் வனக் காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் சனிக்கிழமை தீவிர வன விலங்கு வேட்டை தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளுடன் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் தண்டராம்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் சிவலிங்கம் (50), தண்டராம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி மகன் தனுஷ் (23), பூனாஸ்பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பூபதி (23) என்பதும், இவர்கள் தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாடி, இறைச்சியை விற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத்துறையினர், இவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல, தண்டராம்பட்டை அடுத்த நாளால்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் ராஜா (39) வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.