தெலங்கானாவில், பார்மா நிறுவனமொன்றில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பற்றிய சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன…தெலங்கானாவில், ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு பார்மா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து 50 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் துணிகர செயலை பலரும் பாராட்டிவருகின்றனர்.
முன்னதாக, ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகமவில் உள்ள ஆல்வின் பார்மா நிறுவனத்தின் கட்டடமொன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, இதைக் கவனித்த 17 வயது சாய் சரண் என்ற சிறுவன், தீ வேகமாகப் பரவுவதைக் கவனித்து உடனடியாக அந்தக் கட்டடத்தின் மீது ஏறி ஜன்னலின் வழியாக உள்ளிருந்த 50 தொழிலாளர்களுக்கு கயிற்றைக் கொடுத்து அவர்கள் வெளியேற உதவினார்.தக்க சமயத்தில் அந்த சிறுவன் துரிதமாகச் செயல்பட்ட காரணத்தால், அதிர்ஷ்டவசமாக அனைத்து தொழிலாளர்களின் உயிரும் காப்பாற்றப்பட்டனர்.
இதற்கிடையில், தீயணைப்பு போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் துணிச்சலான செயலைப் பாராட்டினார். அப்பகுதியைச் சேர்ந்த பலரும் சாய் சரணை ரியல் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ரங்காரெட்டி தீயணைப்புத் துறை அதிகாரி டி.பூர்ணச்சந்தர், `மாலை 5 மணியளவில் தீ விபத்து குறித்து நந்திகம மக்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. பல்வேறு இடங்களிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் ஸ்டோர் இருக்கும் குடோனில் இருந்து தீ பரவியிருக்கிறது. ஒருவழியாகத் தொழிலாளர்களை மீட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம்” என்று கூறினார்.
மேலும், வெல்டிங் பணிகளின்போது ஏற்பட்ட தீப்பொறி விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்
