தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கும் ஒன்று. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர்கல்வித்துறையிலும் பெரும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல்ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கில், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர்மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில்நுட்ப முறைக்கேடு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் இன்னும் பலர்மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என இறுதிசெய்யப்பட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளி என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.