திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் வனப்பகுதிகளில் சிறியளவில் பற்றிய காட்டுத்தீ, தற்போது பெரிய காட்டுத்தீயாக மாறி பல நாட்களாக க இரவு, பகலாக பற்றி எரிந்து வருகிறது.
ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட வனத்துறையினர் ஒரு கட்டத்தில் காட்டுதீ அதிக இடங்களில் பரவ ஆரம்பித்ததை அடுத்து காட்டு தீயை கட்டுபடுத்த முயன்று தோற்றனர் . இந்நிலையில் முதலமைச்சர் திடீரென கொடைக்கானல் வரும் அறிவிப்பு வெளியானதை அடுத்து வனத்துறையினர் அருகில் உள்ள மாவட்ட வன ஊழியர்களையும் அழைத்து வந்து காட்டு தீயை கட்டுபடுத்த முயற்சித்தும் அணைக்க முடியவில்லை.
காட்டுத்தீயில் இதுவரை 500 ஏக்கருக்கு மேலாக காடுகள் எரிந்து நாசமாகி விட்டன. இதனால் இப்பகுதியில் பசுமை போர்த்தி காணப்பட்ட புல்வெளிகள் தற்போது சாம்பல் நிறைந்த காடுகளாக காட்சியளிக்கின்றன.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள், நகராட்சியில் இருந்து 11 தண்ணீர் வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் நகராட்சி, ஊரக உள்ளாட்சி, வனப்பணியாளர்கள், உள்ளூர்வாசிகள் என 500க்கும் ,மேற்பட்டோர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.