ஆன்மீகம்செய்திகள்
Trending

அணை நீர்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் கோவில் மண்டபம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்ததால், மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகரில் பவானி ஆறும் மாயாறும் கூடும் இடத்தில் பவானிசாகர் அணை (கீழ்பவானி அணை) கட்டும் பணி 1948-ம் ஆண்டு தொடங்கியது.

இதனால் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் இருந்த வடவள்ளி பீர்கடவு பட்டரமங்கலம் குய்யனூர் உள்ளிட்ட கிராம மக்கள் பண்ணாரி வனப்பகுதிக்கு குடியேறினர்.

இக்கிராம மக்கள் வழிபாடு செய்து வந்த மாதவராய பெருமாள் சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்கள் ‘டணாய்க்கன் கோட்டை’ என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருந்த இந்த கோயில் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டு கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் புதிய கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பவானிசாகர் அணை கட்டுமானப் பணி 1955 -ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் அணையில் நீர் தேக்கப்பட்டதால் கற்களால் கட்டப்பட்ட கோயில் மற்றும் மண்டபம் மூழ்கின.

தொடர்ந்து நீருக்குள் இருப்பதால் டணாய்க்கன் கோட்டை மற்றும் கோயில் பிரகாரங்கள் சிதிலமடைந்தன.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறையும் போது டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோயில் சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோயில்கள் வெளியே தெரியும். கடந்த 2018 -ம் ஆண்டு நீர்மட்டம் குறைந்த போது இந்த கோயில்கள் வெளியே தெரிந்தன.

அதன் பிறகு 6 ஆண்டுகளாக நீர்மட்டம் குறையாததால் கோயில்கள் தெரியவில்லை.

தற்போது அணையின் நீர்மட்டம் 45 அடியாக சரிந்துள்ளதால் டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக வெளியே தெரிகிறது.

பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணை மீதும் நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button