பாலம் மூடப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் வாகனங்கள்.
ஆனாலும் கனிம வள கடத்தல் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடைபெறுகிறது
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலையை அகலப்படுத்தி அப்பகுதிகளில் மட்டுமாவது நான்கு வழி சாலையாக மாற்றாமல் தொட்டில் பாலம் அமைக்கப்பட்டது.
அப்போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தொட்டில் பாலம் அமைப்பதை எதிர்த்தனர். சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் பணச் செலவு மிச்சம் என்ற நிலையை கருத்தில் கொள்ளாமல் பல நூறு கோடிகள் செலவு செய்து தரமற்ற முறையில் பாலம் கட்டப்படுவதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதை கண்டு கொள்ளாமல் நிதியை மட்டும் கருத்தில் கொண்டு தரமற்ற நிலையில் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக மார்த்தாண்டத்தில் உள்ள பி பி கே மருத்துவமனை கட்டடம் சட்ட விரோதமாக அனுமதிக்கு முரணாக இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2013 ஆம் ஆண்டில் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது . அந்த நோட்டீசை எதிர்த்து பிபி கே மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சில் வழக்குத்தொடுக்கப்பட்டது.
ஆனால் அந்த வழக்கை 2017 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் இதுவரை குழித்துறை நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் பி பி கே மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மார்த்தாண்டம் பகுதியில் பெருமளவு ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்து விட்டால் நான்கு வழி சாலைக்கான பகுதிகள் கிடைத்துவிடும் என்று பல்வேறு தரப்பினர் கூறியும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் பணி தொடர பட்டதாக கூறப்படுகிறது
மூன்று தலைமுறைகளுக்கு போதுமானதாக மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நீடித்து உழைக்கும் என்று பொன்னார் அப்போது கூறினார் என்பது நினைவு கூறத்தக்கது. ஆனால் 6 ஆண்டுகளிலேயே ஊழலின் ஊற்று கண் பாலத்தில் தெரிந்து விட்டது. பம்மம் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் ஜங்ஷன் வரை பல அடி அகலத்திற்கு புறம்போக்கு பகுதிகள் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் ஒரு சிலர் பெற்றனர் மேலும் மார்த்தாண்டத்தில் மஞ்சு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு இருக்கும் பகுதிக்கு முன் புறம் சாலை எவ்வளவு அகலமோ அதே அகலம் பம்மம் முதல் வெட்டுமணி வரை உள்ளதாகவும் அதன் பின்னர் அரசுக்கு சொந்தமான ஆற்றுப்பகுதிகள் தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதேபோல மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ காம்ப்ளக்ஸ் பகுதி கூட புறம்போக்கு பகுதி என்றும் சர்வே தொடர்பான முன் ஆவணங்களை எடுத்து மீண்டும் ஒரு சர்வே நடத்தினால் புதிய நான்கு வழி சாலையே அமைக்கும் அளவிற்கு சாலை அகலம் கிடைக்கும் என்ற நிலை இருந்தும் அதைக் கண்டு கொள்ளாமல் தரம் கெட்ட விதத்தில் பீரோக்களை அடுக்கி வைத்தது போல் தகடுகளை அடுக்கி வைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டது. குறிப்பாக பார்வதிபுரம் பகுதியில் மேம்பால பணி நடைபெற்ற போது மேலே தூக்கி வைத்திருந்த இரும்பு கர்டர்கள் வளைந்து நெளிந்தது பத்திரிகைகளில் செய்தியாக படத்துடன் வெளியானது.
பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்து பெருங்காற்றால் வளைந்தது என்றும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சமாளித்தது வேறு கதை. காங்கிரிட் தூண்கள் அமைத்து முழுவதும் காங்கிரீடால் பாலம் அமைத்திருந்தால் கூட மிகக் குறுகிய நாட்களில் அமைத்திருக்க முடியும். ஆனால் லஞ்சம் தலைவிரித்து ஆடியதால் தான் இது போன்ற தொட்டில் பாலம் கட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முயன்றதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தின் கீழே உள்ள வியாபாரிகளும் அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் உயிர் பயத்துடன் சென்று வருகின்றனர். தற்போது பாலத்தின் கீழே பொதுமக்களும் வாகனங்களுடன் சென்று வருகின்றனர். ஆனால் பாலத்தின் உறுதித் தன்மை தற்போது கேள்விக்குறியான நிலையில் உடனடியாக பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தினாலே மார்த்தாண்ட பகுதியில் நான்கு வழி சாலைக்கான இடம் கிடைக்கும் என்பதும் ஒரு செலவு மிகவும் குறைவு என்பதும் மற்றொரு சிறப்பு ஆகும்.
தற்போது மிக குறுகிய அணுகு சாலை மட்டுமே மார்த்தாண்டம் பாலப்பகுதியில் உள்ளதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் இவ்வளவு போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் கனிமவள கடத்தல் லாரிகள் மட்டும் தங்கு தடை இன்றி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்பது அரசின் சாதனை. சாலையின் பெரும்பாலான பகுதிகளை தொட்டில் பாலமே ஆக்கிரமித்து உள்ளதால் அணுகுச் சாலை வழியே பயணிக்கும் வாகனங்கள் பல மணி நேரம் கடந்து தான் பயணிக்க வேண்டி உள்ளது.
உடனடியாக மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமையும் ஆகும். ஆகவே தரம் குறைந்த பாலத்தை கட்டிய நிறுவனம் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிப்பதோடு பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற தரம் குறைந்த பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தி பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.