பல்வேறு வகையான கொரோனா தொற்றிலிருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கக்கூடிய ‘ஆல் இன் ஒன்’ (All in one) தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை மருத்துவ அறிவியலில் SARS -COV-2 என்கின்றனர். இது, உலக சுகாதார நிறுவனத்தால் கோவிட் -19 என்று பெயரிடப்பட்டது.லாக்டௌன், தடுப்பூசி, சிகிச்சைகள் என சில ஆண்டுகளுக்குப் பிறகு பெருந்தொற்றை இந்த உலகம் கட்டுக்குள் கொண்டு வந்தது. இருந்தாலும், முழுமையாக இந்தத் தொற்று ஒழிக்கப்படவில்லை. காமா, பீட்டா, ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் போன்ற பல்வேறு வகைகளாக இவை உருவெடுத்து வருகின்றன. இதில், தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத வகைகளும் உண்டு.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள கால்டெக் பல்கலைக்கழகம் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு, இதுவரை கண்டறியப்பட்ட மற்றும் கண்டறியப்படாத என SARS-cov2 வின் அனைத்து வகையான வைரஸ்களுக்கும் எதிராகச் செயல்படும் ‘ஆல் இன் ஒன்’ தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளது.இந்தத் தடுப்பூசியானது மனித உடலில் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமி உருவாவதற்கு முன்பே அவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் குறிப்பிட்ட சில வகை கொரோனா வைரஸின் வகைகளுக்கு எதிராக மட்டுமே செயல்படும் தன்மையைக் கொண்டிருந்தன.
தற்போது நாங்கள் கண்டறிந்துள்ள தடுப்பூசி அனைத்து வகையான தொற்றுக்கும் எதிராகச் செயல்படும் திறனைக் கொண்டுள்ளது. இது நோயை உண்டாக்கும் நோய்க்கிருமி உருவாவதற்கு முன்பே அவற்றை எதிர்த்து செயலாற்றக்கூடிய நோய் எதிர்ப்புத் திறனை மனித உடலில் அதிகரிக்கச் செய்யும்.எலியின் மீது நடத்தப்பட்ட சோதனையில் இந்தத் தடுப்பூசி முழுமையாக வெற்றி அடைந்துள்ளது. அடுத்தகட்டமாக மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை நடத்தப்படும். அதிலும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். அதன்பிறகு All in one தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
