வள்ளியூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான கோயில் ஆகும். தென் மாவட்டங்களில் குகை கோயில்களில் சிறப்பு பெற்றது.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.
இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார்.
வள்ளியூர் முருகன் கோயில் மலையை குடைந்து குகைக்குள் மூலவர் இருப்பதால் உள் பிரகாரம் இல்லாமல் கிரிவலம் வந்தால் தான் முருகரை சுற்ற முடியும் என்பது இந்த கோயிலின் சிறப்பு.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி, தெப்பம், தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்கிறது. இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக காலை சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர்.