ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் இருந்து இரு தங்கங்களை பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் அருகே யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, நேற்று நள்ளிரவு தனிப்படை போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தூர் அருகே பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, விற்பனைக்காக யானை தந்தங்களை கொண்டு வந்தது தெரிய வந்தது.
பைக்கில் வந்த ராஜபாளையம் அருகே கணபதிசுந்தரநாச்சியார்புரம் சாவடி தெருவைச் சேர்ந்த அனந்தப்பன் மகன் ராம் அழகு (40) என்பவரிடம் இருந்து ஒரு அடி உயரமும் 3.5 கிலோ எடையும் கொண்ட இரு யானைத் தந்தங்களை பறிமுதல் செய்த தனிப்படையினர், அவரை ராஜபாளையம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
யானை தந்தங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.