புனேயில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் சிறுவனை காப்பாற்ற ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிய டாக்டர்கள் கைது
புனே மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான கட்டுமான பணிகளை அகர்வால் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு சொத்து மட்டும் 600 கோடிக்கும் மேல் இருக்கிறது. மைனர் சிறுவனை காப்பாற்ற அகர்வாலின் ஒட்டுமொத்த குடும்பமும் வேலை செய்துள்ளது .
தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தை நான்தான் ஏற்படுத்தினேன் என்று கூறும்படி அகர்வால் தந்தை சுரேந்திர அகர்வால் தங்களது குடும்ப கார் டிரைவரை மிரட்டியுள்ளார். அதோடு டிரைவரை வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி இருக்கிறார்கள்.இது தொடர்பாக மைனர் சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே விபத்து நடந்தவுடன் சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த நிலையில் தான் சிறுவனின் ரத்த பரிசோதனை அறிக்கை வந்த போது அதில் சிறுவன் மது அருந்தவில்லை என்று அறிக்கை வந்திருக்கிறது.இந்நிலையில், ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிக்கொடுக்க பில்டர் குடும்பம் தங்களது பணபலத்தை பயன்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புனேயில் உள்ள அரசு மருத்துவமனையான சசூன் மருத்துவமனைக்குத்தான் சிறுவன் ரத்த பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான். அங்கு தடயவியல் ஆய்வுக்கூடத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் அஜய் தவாடே, டாக்டர் ஹரி ஹர்னூர் ஆகியோர் சிறுவனின் ரத்த அறிக்கையை மாற்றிக்கொடுத்து மோசடி செய்துள்ளனர் என்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரும் தற்போது குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸாரின் விசாரணையில் டாக்டர் தவாடே விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை அகர்வாலிடம் போனில் பேசி இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் கூறுகையில், ”இந்த விபத்து குடிபோதையில் தவறுதலாக நடந்த விபத்து கிடையாது.
விபத்தை ஏற்படுத்திய நபர் நல்ல மனநிலையில் இருந்துள்ளார். இரண்டு பீர்பார்களில் மது அருந்திவிட்டு குறுகலான சாலையில் கண்மூடித்தனமாக கார் ஓட்டினால் உயிரிழப்புகள் ஏற்படும் என்று தெரிந்தே காரை ஓட்டி இருக்கிறார்” என்றார்.
மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த 17 வயது மைனர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கார் கொடுத்த அவரின் தந்தையும் பிரபல பில்டருமான அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் சிறுவன் முதலில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு பின்னர் போலீஸார் மேல் முறையீடு செய்ததால் சிறார் நீதிமன்றம் சிறுவனனை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.