பழங்குடியினப் பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் பேராவூர் அருகே உள்ள நிடும்பொயிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், “கண்ணூரில் உள்ள பெரும்தொட்டியைச் சேர்ந்த பென்னி என்பவர், 2014-ல் என் கணவரின் சிறுநீரகத்தை விற்க உதவினார். அந்த நேரத்தில் என்னையும் பல சோதனைகளைச் செய்தார்கள்.என் கணவர் சிறுநீரகத்தை தானம் செய்ததைத் தொடர்ந்து பல உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்கிறார். இந்த நிலையில், என் சிறுநீரகத்தையும் விற்பதற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். நான் ஒத்துழைக்கவில்லை என்றால், என்னைக் கொன்று விடுவதாக மீரட்டுகிறார்கள்.
இது தொடர்பாக ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் அவர்கள் என்னை அறுவை சிகிச்சைக்கு கொச்சிக்கு அழைத்தார்கள். அதற்கு முன்பு நான் நம்பிய எனது வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு நண்பரின் உதவியுடன் தப்பித்தேன்.
தற்போது என் கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து என்னை சிறுநீரகம் விற்பதற்கு ஒப்புக்கொள்ளும்படி அடித்து மிரட்டுகிறார். அதனால் குழந்தைகளுடன் காட்டில் மறைந்திருக்கிறேன்.
மே 15-ம் தேதி எர்ணாகுளத்திலும், பின்னர் கண்ணூர் ரேஞ்ச் டி.ஐ.ஜி., பரியாரம் டி.எஸ்.பி., கெளகம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தேன். ஆனால், எனக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் புகார் தொடர்பாக பேராவூர் டி.எஸ்.பி அஷ்ரஃப், “அந்தப் பெண்ணின் புகாரின்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சனிக்கிழமை பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளோம், மேலும் அவரது புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.