ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருதரப்பினர் பயங்கர மோதல்… ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொன்ட சம்பவத்தால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு கொல்லப்பட்டி கிராமத்தில் 23 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் நான்கில் ஒரு பகுதி வேலுச்சாமியின் உறவினர் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இருதரப்பினரும் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இருதரப்பினரும் தங்களது ஆவணங்களை காட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக அதிகாரிகள் அனைவரையும் வெளியில் செல்லுமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டனர். அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த இரு தரப்பினரும் மீண்டும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி சட்டைகளை கிழித்துக்கொண்டு இரு சக்கர வாகனங்களையும் தள்ளிவிட்டு கடும் மோதலில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வந்ததையும் அறியாமல் இரு தரப்பினரும் மாறி மாறி கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்தச் சம்பவத்தால் குஜிலியம்பாறை பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருதரப்பை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.