அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.
இதேபோல, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது. மூன்று வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்தன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்திருந்தது. கடந்த 1996-2001-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக, 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கில் உரிய சாட்சிகள் இல்லையென்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டன. இருப்பினும் இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.