உளுந்துார்பேட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
உளுந்துார்பேட்டை தாலுகா கிழக்கு மருதுாரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலை காலனி பகுதியில் இருந்து ஊர் பகுதி வழியாக சென்றபோது, வேப்ப மரக்கிளையில் மோதி உடைந்து சேதமடைந்தது. இதனால் ஊர் பகுதி மக்கள் தான் சிலையை சேதப்படுத்தினர் என கருதி சத்தம் எழுப்பினர்.
இதனால் அங்கே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் திருநாவலுார் போலீசார் விரைந்து சென்று தரப்பினரையும் கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று (செப் 9) மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 5:20 மணியளவில் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, சிலைகள் ஊர்வலமாக கடலூர் கடலில் கரைப்பதற்காக புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.