
தமிழகம் முழுவதும் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் 383 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி நாளை முதல் அரசு பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து பல மாதங்களாக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் நாளை காலை முதல் இயங்க உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 383 பேருந்துகள் இயக்க தயாராகி வருகின்றது. கிருமிநாசினி முக கவசம் போன்ற தொற்று பரவாமல் தடுக்கும் சாதனங்களுடன் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மட்டுமின்றி பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.