கார்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைய போகிறது.. இஸ்ரோ உருவாக்க போகும் ஒரு தொழில் நுட்பம் காரணமாக கார்களின் விலையில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள். கார்களின் சென்சார் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. செலவை குறைக்கும் விதமாக உள்நாட்டிலேயே கார் சென்சார்களை உற்பத்தி செய்ய இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.
தற்போது வரும் கார்கள் எல்லாமே சென்சார் உதவியுடன் செயல்படும் கார்களாகவே உள்ளது. இதில் என்ன தான் கார்களை நாம் தயாரித்தாலும், இதற்கான சென்சார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே சொகுசு கார்கள் தொடங்கி சாதாரண கார்கள் வரை பல்வேறு கார்களின் விலை சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இ
இந்த சென்சார்களை இந்தியாவிலேயே தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் இதுபற்றி கூறுகையில் , “நாட்டில் ராக்கெட், விண்கலன்களுக்கு தேவையான சென்சார்கள் தயாரிப்பது என்பது மிகவும் கடினமானவையாக இருக்கிறது. இவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை படைத்து வருகிறார்கள் ஆனால் கார்களுக்கு தேவையான சென்சார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை இருக்கிறது. இந்தியாவில் ஓடும் பெரும்பாலான கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுவது தொடர்கிறது. ராக்கெட், விண்கலன்களுக்கு தேவையான சென்சார்களையே இஸ்ரோ தயாரித்து வரும் நிலையில், கார்களுக்கு தேவையான சென்சார்களை மேலும் குறைந்த விலையில் உற்பத்தி செய்து கார் உற்பத்தி துறைகளுக்கு சேவை செய்ய இஸ்ரோவால் நிச்சயம் முடியும். கார் சென்சார்களை இந்தியாவிலேயே குறைந்த விலையில் உற்பத்தி செய்வது தொடர்பாக கார் உற்பத்தி நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இ
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரி இதுபற்றி கூறும்போது, ‘இந்தியாவில் சென்சார்களை உருவாக்கும் யோசனை, பல எலட்டிரான் வோல்ட்டு மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ள மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
தற்போதைய நிலையில் கார்களின் விலை அதிகம் என்பது தான் வாடிக்கையாளர்களின் கவலையாக உள்ளது. எனவே புதிய தொழில்நுட்ப சென்சார்கள், மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விலையை குறைக்க உதவும். மேலும் புதிதாக தொழில்களை தொடங்கும் நிறுவனங்களுக்கும் பெரிதும் உதவியாக அமையும். பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் இந்த யோசனையில் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்றார்.
சென்னை தான் ஆட்டோ மொபைல் தொழிலில் இந்தியாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. எனவே கார்களுக்கு தேவையான சென்சார்களை இஸ்ரோ உள்நாட்டில் தயாரிக்கும் நிலை உருவானால், அது தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஆட்டோ மொபைலில் முன்னணியில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை தரும். கார்களின் விலையும் குறையும் என்பதுடன், வேலைவாய்ப்பும் பெரிய அளவில் அதிகரிக்கும். இதன் காரணமாக கார் சென்சார் தயாரிப்பு குறித்து பல நிறுவனங்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.