திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்படூர், பெரியகுளம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்தும், மரம் வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை பெரியகுளம் பள்ளித் தலைமை ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் தொடங்கிவைத்தார்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மேல்படூர் பகுதியில் உள்ள இயற்கையான வனப்பகுதியை சுற்றி வந்தனர். அப்போது மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் மாணவர்களுக்கு இயற்கையான சூழலை காண்பித்து அநந்தச் சூழலில் பல்வேறு மரங்களின் பெயர்களைக் கூறி அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, மாணவர்கள் கிராமப் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் மூர்த்தி, அஜித் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.