தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலவிநாயகர் கோவில் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி மாநகரில் பாளையங்கோட்டை ரோடு, வி.இ.ரோடு, ஜார்ஜ் ரோடு ஆகிய 3 முக்கிய சாலைகள் உள்ளன. இதில் 2 சாலைகள் ஒருவழிப்பாதை சாலையாக உள்ளன. அதே நேரத்தில் காய்கனி மார்க்கெட் சிக்னல் அண்ணா சிலை சந்திப்பு முதல் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு வரை இருவழிச் சாலையாக பாலவிநாயகர் கோவில் தெரு செயல்பட்டு வந்தது.
இந்த தெருவில் பல்வேறு வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள் அமைந்து உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இந்த சாலையை ஒருவழி பாதையாக மாற்ற எஸ்பி ஆல்பர்ட்ஜான் ஆலோசனையின் பேரில், டிஎஸ்பி மதன் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து நேற்று முதல் பாலவிநாயகர் கோவில் தெரு சாலை ஒருவழிச்சாலையாக மாற்றி போக்குவரத்து போலீசார் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக விளம்பர பதாகையும் வைத்து உள்ளனர். அதன்படி அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி வரும் வாகனங்கள் பாலவிநாயகர் கோயில் தெருவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பாதையில் வாகனங்கள் வராமல் தடுக்க போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி மட்டுமே வாகனங்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பாளையங்கோட்டை சாலையில் இருந்து பாலவிநாயகர் கோவில் தெருவுக்கு வரவேண்டும் எனில் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதிக்கு வந்து, அங்கிருந்து திரும்பி தான் வரவேண்டும். அதே போன்று இந்த தெருவுக்கு வரும் ஷேர் ஆட்டோக்கள் வி.இ. ரோட்டில் சுகம் ஓட்டல் சந்திப்பு, ஜின்பாக்டரி ரோடு வழியாக வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருவதை மக்கள் வரவேற்று உள்ளனர். அதே நேரத்தில் ஜின்பாக்டரி ரோடும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாக உள்ளது. அந்த சாலை வழியாக ஷேர் ஆட்டோ, மினிபஸ்கள் இயக்கப்படும் போது, கடும் நெரிசலை சந்திக்க நேரிடும். ஆகையால் ஜின்பாக்டரி ரோட்டையும் ஒருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.