திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போது, தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது.சுமார் 15 கி.மீ. தூரம் அவர்கள் சுற்றி, வேறு ஊர்களுக்கு சென்றனர்.
இதனையடுத்து, அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. செப்டம்பர் 2ம் தேதி தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை, பெஞ்சல் புயல் காரணமாக வேகமாக நிரம்பியது.இதனையடுத்து அந்த அணைக்கு வந்த சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூரை இணைக்கும் பாலமும் தப்பவில்லை. ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் இந்த வெள்ளத்திற்கு அடித்துச் செல்லப்பட்டது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.