திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருவது குறித்து பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வந்த வண்ணம் இருந்தது .
இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது . ஆனால் மாட்டு உரிமையாளர்கள் கண்டுகொள்ளாமல் மீண்டும் சாலைகளில் மாடுகளை விடுவது தொடர்ந்தது .
இந்நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் மாட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார் . அதில் சாலைகளில் திரியும் மாடுகளை உடனடியாக அதன் உரிமையாளர்கள் தங்களது சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் இனி சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்தால் திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என்றும் கோசாலையில் கொண்டு சென்று விட்டு விடுவோம் என்றும் அறிவித்திருந்தார் .
ஆனால் தொடர்ந்து மாட்டு உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளிலேயே விட்டு வந்தனர் . இது குறித்து தலைமை செயலாளர் உட்பட மாநில அளவிலான அதிகாரிகளின் கவனத்திற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எடுத்து சென்றதனை தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாநகராட்சியின் சுகாதார பிரிவு அதிகாரிகள் சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளில் சிலவற்றை மட்டும் பிடித்துள்ளனர் .
பல்வேறு சாலைகளில் நூற்றுகணக்கான மாடுகள் சுற்றி திரியும் நிலையில் இன்று எடுத்த நடவடிக்கை போன்று தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிடிபட்ட மாடுகளை விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் படி கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .